×

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 4 பணிமனைகளில் தினமும் 320 யூனிட் சோலார் மின்சாரம் உற்பத்தி

சேலம் : சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், 4 பணிமனைகளில் சோலார் பேனல் மூலம் தினமும் 320 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 பணிமனைகள் உள்ளன. பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பணிமனைகளில் வெட்ட வெளி பரப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையானது, சேலம் கோட்ட அரசு ேபாக்குவரத்து கழக பணிமனைகளை ஆய்வு மேற்கொண்டது. இதில், சூரியஒளி தடையின்றி கிடைக்கக் கூடிய இடங்களை தேர்வு செய்தது. சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, இடைப்பாடி ஆகிய இடங்களில் சூரிய ஒளி மூலம் (சோலார் பேனல்)320 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில், சேலம் ராமகிருஷ்ணசாலை பணிமனை வளாக கட்டிடத்தில் 20 கிலோவாட், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 15 கிலோ வாட், இடைப்பாடியில் 10கிலோ வாட் என்ற அளவில் மின் உற்பத்தி செய்ய சோலார் பேனலை பணிமனைகளில் உள்ள கட்டிடங்களில், கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவியது. இதில் கிடைக்கும் மின்சாரத்தை அந்தந்த பணிமனைகளுக்கு குறைந்த விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், சோலார் பேனல் மூலம் தினமும் 320 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சேலம் கோட்ட போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பணிமனை கட்டிடம், இடைப்பாடி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு பணிமனைகளிலும் சோலார் பேனல் நிறுவப்பட்டுள்ளது.

25 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சோலார் பேனல் நிறுவப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் சோலார் பேனல் மூலம், மின் உற்பத்தி கட்டமைப்பு சேலம் கோட்டத்தின் சொந்த உடைமையாகி விடும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு யூனிட் ₹4.65 என்ற விலையில், தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு கட்டணமாக செலுத்தி விடுகிறோம்.

தேவைக்கும் கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தை யூனிட்₹2.10 என்ற விலையில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வழங்கி விடுகிறோம். சோலார் பேனல் மின்சாரம் தயாரிப்பதன் மூலம் ஒரு யூனிட்டுக்கு ₹3.80 லாபமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மாசில்லா மின் உற்பத்திக்கு துணை செய்வதுடன் மின்சாரத்துக்காக கூடுதலாக செலவிடுவது தவிர்க்கப்பட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்தின் வருவாயை பெருக்க உதவுகிறது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டத்தை செயல்படுத்தி, சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்யும் முதல் அரசு போக்குவரத்து கழகம் என்ற பெருமையும் சேலம் கோட்டத்துக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Salem Gotda Government Transport Corporation , Salem, Solar Panel, Transport, Transport Workshop
× RELATED சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13...